search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்"

    நிலத்தடி நீர் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் நீடிக்கிறது. #CanWater #WaterLorriesStrike
    சென்னை:

    வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடை செய்வதுடன், வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

    அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இன்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்கிறது. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது.

    இதற்கிடையே நிலத்தடிநீர் எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் நேற்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர். கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    இப்போராட்டம் காரணமாக ஒரு சில பகுதிகளில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கேன் குடிநீர் சப்ளை இல்லாததால், குடிநீர் கேன்களை இருப்பு வைத்திருந்த சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடக்கூடாது என்று உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குடிநீர் உறிஞ்சுவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

    அத்துடன், அடுத்தகட்டமாக 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றது. 22ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது விரிவான அறிக்கை வழங்கப்படும் என்று சங்கத் தலைவர் தெரிவித்தார்.

    ஆனால், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, அவர்கள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை. ஸ்டிரைக் நீடிக்கும் என அறிவித்துள்ளனர். #CanWater #WaterLorriesStrike
    ×